5 வயது சிறுவன் அடித்துக் கொலை - கோவில் வளாகத்தில் பிணம் வீச்சு


5 வயது சிறுவன் அடித்துக் கொலை - கோவில் வளாகத்தில் பிணம் வீச்சு
x
தினத்தந்தி 26 Aug 2018 4:45 AM IST (Updated: 26 Aug 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே 5 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்து கோவில் அருகே பிணத்தை வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தில் டான்சி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது.

இந்த தொழிற்சாலை அருகே விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனின் பிணம் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் போர்வையில் சுற்றி வீசப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் பிணத்தை பார்வையிட்டனர். இறந்த சிறுவன் யார்? எந்த ஊர், அவரது பெற்றோர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொல்லப்பட்ட சிறுவன் வெளியூரை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மர்ம நபர்கள், பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதற்காகவும் அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

எனவே, சிறுவனை யாராவது கொலை செய்துவிட்டு, இப்பகுதியில் வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story