புதுச்சேரி-சின்னபாபுசமுத்திரம் இடையே நீராவி என்ஜினுடன் கூடிய ரெயில் பயணம் தொடக்கம்


புதுச்சேரி-சின்னபாபுசமுத்திரம் இடையே நீராவி என்ஜினுடன் கூடிய ரெயில் பயணம் தொடக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2018 5:39 AM IST (Updated: 26 Aug 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி-சின்னபாபுசமுத்திரம் இடையே நீராவி என்ஜினுடன் கூடிய ரெயில் பயணம் நேற்று தொடங்கியது.

புதுச்சேரி,

1855-ம் ஆண்டு பிரிட்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட நீராவி ரெயில் என்ஜின் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1909-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த நீராவி ரெயில் என்ஜின் பயன்பாட்டில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. பின்னர் அந்த என்ஜின் ஹவுராவில் உள்ள ஜமால்பூர் பணிமனையில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு அந்த என்ஜின் சரிசெய்யப்பட்டு சென்னை எழும்பூர்-கோடம்பாக்கம், சென்ட்ரல்-பெரம்பூர் இடையே சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டு வந்தது. சுமார் 163 ஆண்டு பழமைவாய்ந்த இந்த ரெயில் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டது.

புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால் நீராவி என்ஜினுடன் கூடிய ரெயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து சின்னபாபு சமுத்திரம் வரை சென்று மீண்டும் புதுவைக்கு திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இந்த பாரம்பரிய ரெயில் பயணத்தின் தொடக்க விழா நேற்று காலை புதுவை ரெயில் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி கலந்து கொண்டு ரெயில் பயணத்தை தொடங்கி வைத்தார். புதுவை ரெயில் நிலைய மேலாளர் குணசீலன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முதல் நாளான நேற்று இந்த ரெயிலில் நேற்று 35 பேர் பயணம் செய்தனர். காலை 11 மணிக்கு புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த ரெயில் மதியம் 12.30 மணிக்கு மீண்டும் புதுச்சேரி வந்தடைந்தது. இந்த ரெயில் ஓரிரு மாதங்கள் புதுச்சேரி-சின்னபாபு சமுத்திரம் இடையே 20 முதல் 25 கி.மீ வேகத்தில் 17 கி.மீ. தூரம் இயக்கப்பட உள்ளது. இந்த பாரம்பரிய ரெயிலில் பயணம் செய்ய பெரியவர்களுக்கு ரூ.500, சிறியவர்களுக்கு ரூ.300 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மொத்தம் 40 பேர் பயணம் செய்ய முடியும்.

Next Story