திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்


திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:00 AM IST (Updated: 27 Aug 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.

மாநாட்டிற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வராசு, இடும்பையன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சம்பந்தம், கட்சி மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு ஆதார விலையை உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகளையும் செப்பனிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கதவணைகள் அமைக்க வேண்டும். இறால் குட்டைகளை அகற்ற வேண்டும். விளைநிலங்களை மனைகளாக மாற்றக்கூடாது. மணல் கொள்ளையை தடுத்து கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். கீழ்வேளூரில் விவசாய கல்லூரியும், திருமருகலில் கால்நடை மருத்துவக்கல்லூரியும் அமைக்க வேண்டும். கரும்புக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாபுஜி, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாஸ்கர், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராமன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் மேகலா, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் பாண்டியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story