விவசாயி வீட்டில் ரூ.1¼ லட்சம் நகை- பணம் கொள்ளை


விவசாயி வீட்டில் ரூ.1¼ லட்சம் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 27 Aug 2018 3:00 AM IST (Updated: 27 Aug 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே விவசாயி வீட்டில் ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள ஓடைத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் மகன் செல்வராஜ்(வயது 47), விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் அதேஊரில் உள்ள வயலுக்கு சென்றார். பின்னர் அங்கு விவசாய பணிகள் முடிந்ததும் செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 5¾ பவுன் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபாயை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.

இதனிடையே இதுபற்றி தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகை-பணம் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு செல்வராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணணயில், செல்வராஜ் தனது குடும்பத்துடன் வயலுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story