சின்னமனூர் அருகே கூலித்தொழிலாளி குத்திக்கொலை


சின்னமனூர் அருகே கூலித்தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2018 10:15 PM GMT (Updated: 26 Aug 2018 10:51 PM GMT)

சின்னமனூர் அருகே முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனூர், 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சின்னமனூர் அருகே உள்ள கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் அழகர் (வயது 60). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த முருகன் (53). அவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அழகர் குடிபோதையில் முருகன் வீட்டு முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகன், அவருடைய மகன் தவஈஸ்வரன் (25) ஆகியோர் சேர்ந்து தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் அழகரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து முருகனும், தவஈஸ்வரனும் தப்பியோடி விட்டனர்.

தகவலறிந்த சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அழகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனையும், தவஈஸ்வரனையும் தேடி வந்தனர். நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story