பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி தீவிரம்


பாவூர்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கிய தொழிலாளி தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:30 AM IST (Updated: 27 Aug 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே, குளத்தில் தொழிலாளி மூழ்கினார். இதையடுத்து தீயணைப்பு படையினர் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாவூர்சத்திரம், 


பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வணிகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மகன் சுடலை (வயது 40). கூலித்தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் கீழப்பாவூருக்கு வடக்கு பகுதியில் உள்ள மேலப்பாவூர் குளத்துக்கு குளிக்கச் சென்றனர்.
சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி தண்ணீர் மறுகால் சென்று வருகிறது. இந்தநிலையில் அங்கு குளித்துக் கொண்டிருந்த சுடலை திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் குளத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு சுடலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்தினர்.

பின்னர் நேற்று காலை பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story