கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து சாவு: காட்டுயானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பால் ஊற்றி வனத்துறையினர் அஞ்சலி
கூடலூர் அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து காட்டுயானை உயிரிழந்தது. அந்த காட்டுயானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் வனத்துறையினர் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலவாடி 1–ம் பாலம் பகுதிக்குள் கடந்த 24–ந் தேதி காலை 6 மணியளவில் ஒரு காட்டு யானை புகுந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த யானையை விரட்டினர். அப்போது அங்குள்ள ஒரு கழிவுநீர் தொட்டியில் காட்டுயானை தவறி விழுந்தது. அதில் பலத்த காயம் அடைந்த காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. அந்த யானையின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. 50 வயது மதிக்கத்தக்க அந்த காட்டுயானை விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. ஆனால் யாரையும் தாக்கியது இல்லை. பொதுமக்களிடம் இயல்பாக பழகி வந்தது. இதனால், அந்த காட்டுயானை இறந்தது பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் கொளப்பள்ளியில் இறந்த காட்டுயானைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இறந்த காட்டுயானையின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று காலை 9 மணிக்கு ஓவேலி வனவர் செல்லதுரை தலைமையில் வனத்துறையினர் சென்றனர். பின்னர் அந்த இடத்தில் மாலை அணிவித்து, ஊதுபத்திகள் கொளுத்தினர். தொடர்ந்து 1 லிட்டர் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். மனிதர்களுடன் இயல்பாக பழகி வந்த காட்டுயானை உயிரிழந்தது பொதுமக்களை மட்டுமின்றி வனத்துறையினரையும் கண்கலங்க செய்துள்ளது.