கேத்தம்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நவீன வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு


கேத்தம்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நவீன வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 10:01 PM IST)
t-max-icont-min-icon

கேத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நவீன வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது கேத்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கேத்தம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கு போதுமான கட்டிட வசதி இல்லை. இந்த கட்டிடம் கட்டி 25 ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உறுதித்தன்மை குறைந்து வருகிறது. வளர்ந்து வரும் பகுதி என்பதால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே உறுதிதன்மை குறைந்த கட்டிடத்தை இடித்து விட்டு 2 தளங்களுடன் 10 வகுப்பறைகளுடன் கூடிய நவீன கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

பெருமாநல்லூர் மகளிர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கொடுத்த மனுவில் ‘‘தரம் உயர்த்தப்பட்ட பெருமாநல்லூர் மகளிர் அரசு உயர்நிலைப்பள்ளி புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் சில காரணங்களினால் பணிகள் நடைபெறாமல் தாமதம் ஏற்படுகிறது. எனவே பள்ளி புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து பணிகள் நடைபெற்று விரைந்து முடித்திட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றிருந்தனர்.

மணியகாரம்பாளையத்தை சேர்ந்த த.மு.மு.க.வினர், மனிதநேய மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘ நல்லூர் மணியகாரம்பாளையம் வி.எஸ்.ஏ. நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் வி.எஸ்.ஏ.நகர் மெயின் வீதியில் பொதுமக்கள் செல்லும் பாதையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இங்கு மின்வயர்கள் உராய்வின் காரணமாக வெடித்து, நெருப்பு பொறிகள் பறக்கின்றன. இதனை அகற்ற வேண்டும். மேலும், ராக்கியாபாளையத்தில் இருந்து நொய்யலாற்றில் கலக்கும் ஆழமான சாக்கடை கால்வாய் வி.எஸ்.ஏ.நகர் வழியாக செல்கிறது. இது வீதி வழியாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதனை வீதியில் ஒதுக்குபுறமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூர் வெள்ளிரவெளியை சேர்ந்த காளியப்பன் என்பவர் கொடுத்த மனுவில் ‘‘ வெள்ளிரவெளி அரசு ஆரம்ப பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை 5–ம் வகுப்பு முடித்து விட்டு செல்லும் போதும், 1–ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் போதும் கட்டணங்களை வசூலித்து வருகிறார். மேலும், தலைமை ஆசிரியையின் முறைகேடுகளை மறைக்கும் பொருட்டு அதற்கு துணை போகாத சக ஆசிரியர்கள் 4 பேர் மீதும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கிறார்.

மேலும், மேல் அதிகாரிகளிடம் அந்த ஆசிரியர்கள் குறித்து பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார். அந்த 4 ஆசிரியர்களின் சாதிபெயரை சொல்லி ஒருமையில் பேசுகிறார். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தேசியக்கொடியுடன் வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் ‘‘ திருப்பூர் மாவட்டம் முழுவதும் நீர்வழித்தடம் மற்றும் பொது நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்க நடவடிக்கை வேண்டும். மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறவர்களுக்கு துணைபோகிற அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அருந்ததியர் பாசறையை சேர்ந்தவர்கள் வாயில் கருப்பு துணியை கட்டியபடி வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் ‘‘ஊத்துக்குளி வட்டம் பெரியபாளையம் ஊராட்சி குளத்துப்பாளையத்தில் தலித், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வீட்டுமனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

கணக்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் ‘‘கணக்கம்பாளையம் ஊராட்சி அருகே வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே தபால் நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story