உடுமலை அருகே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்
உடுமலை அருகே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது உடுமலை கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
உடுமலை கணக்கம்பாளையம் பகுதியில் பல வருடங்களாக நாங்கள் சொந்த வீடு இல்லாமல், குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்து வந்து கொண்டிருக்கிறோம். வாடகை பணம் கொடுக்க மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
இந்த நிலையில் உடுமலை தாலுகா ஆண்டியகவுண்டனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரிசினம்பட்டி கிராமத்தில் புறம்போக்கு நிலம் 12 ஏக்கர் உள்ளது. எனவே இந்த நிலத்தில் வீடு இல்லாத எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் வீட்டுமனை பட்டாவை உடனே வழங்கி உதவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.