ராஜன் நகரில் இருந்து கோபிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மாணவ–மாணவிகள் மனு


ராஜன் நகரில் இருந்து கோபிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மாணவ–மாணவிகள் மனு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:15 AM IST (Updated: 28 Aug 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

ராஜன்நகரில் இருந்து கோபிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மாணவ –மாணவிகள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

கோபிசெட்டிபாளையம் கருக்கம்பாளி ராஜன்நகர் பகுதியை சேர்ந்த 25–க்கும் மேற்பட்ட மாணவ –மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ராஜன்நகர் பகுதியில் 90 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கோபியில் உள்ள வேங்கையம்மாள் நகராட்சி உயர்நிலை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள்.

பஸ் வசதி இல்லாததால் எங்களுடைய குழந்தைகள் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகிறார்கள். இவ்வாறு நடந்து செல்லும்போது சில நேரங்களில் அவர்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார்கள். சில குழந்தைகள் தொடர்ச்சியாக பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் விடுமுறையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

மேலும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் நோய்வாய்பட்டால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லக்கூட மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ராஜன் நகரில் இருந்து கோபிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மக்கள் மன்றம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில் பஸ், மினி பஸ் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச்செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு நிர்ணயித்து உள்ளபடி பயணிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவை சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ‘ஈரோடு மாநகராட்சி தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

பவானி அருகே உள்ள எல்.எம்.பாலப்பாளையம் மொட்டபுளி தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘எங்களுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்க இடையூராக உள்ளவர்கள் மீதும், அந்த இடத்தை காலிசெய்யும்படி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அறச்சலூர் அருகே உள்ள வடுகபட்டி வினோபாநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் உள்ள உயர் சாதியை சேர்ந்த 2 பேர் எனது தாயை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். இதனால் நான் தட்டி கேட்டேன். அப்போது அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை தாக்கி விட்டனர். இதில் காயம் அடைந்த நான் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்றேன். இதுகுறித்து நான் அறச்சலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். நான் கொடுத்த புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று கூறி இருந்தார்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 550 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து ஒருவருக்கு மருத்துவ உதவித்தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும், கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சாயம் கலந்த தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து, மாவட்ட வருவாய் அதிகாரி கவிதாவிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:–

வெட்டுக்காட்டுவலசு பகுதியில் தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நீர் நிலைகளில் கலந்து வருகிறார்கள். இதனால் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. எனவே எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலையை நிரந்தரமாக மூட, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story