மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஓட்டல் உரிமையாளரால் தாக்கப்பட்ட கணவருக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: கலெக்டரிடம், குழந்தைகளுடன் மனைவி மனு


மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஓட்டல் உரிமையாளரால் தாக்கப்பட்ட கணவருக்கு மத்திய அரசு உதவ வேண்டும்: கலெக்டரிடம், குழந்தைகளுடன் மனைவி மனு
x
தினத்தந்தி 28 Aug 2018 5:00 AM IST (Updated: 28 Aug 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஓட்டல் உரிமையாளரால் தாக்கப்பட்ட கணவருக்கு, மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவரது மனைவி தனது குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர். அதில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டிமேடு நேருநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில் நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

நேருநகரில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கோவில் கட்டுவதற்காக ஒருவர் தனது நிலத்தை தானமாக கொடுத்து உள்ளார். அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து தற்போது கட்டிடம் கட்டி வருகிறார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நிலத்துக்கு வந்து அளவீடு செய்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அந்த கோவில் நிலத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட நாடுகாணி பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கணவருக்கு மத்திய அரசு உதவி செய்யக்கோரி மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

எனக்கும், ரஜினிகாந்த் என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் பள்ளி படிப்பு படித்து வருகின்றனர். எனது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த ஒருவர் மூலம் மலேசியாவிற்கு ஓட்டல் வேலைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு ஓட்டல் வேலை வழங்காமல் லோடு ஏற்றி, இறக்கும் வேலை வழங்கப்பட்டு உள்ளது. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இருப்பினும் ஓட்டல் உரிமையாளர் எனது கணவரை வேலை செய்ய வற்புறுத்தி அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார். பின்னர் நடக்க முடியாமல் போகவே, அவரை அங்கிருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்.

அவர் அங்கு வேலை செய்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை. தற்போது எனது கணவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன். எனவே மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஓட்டல் உரிமையாளரால் தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எனது கணவருக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story