மழை, வெள்ளம் ஓய்ந்தது; வால்பாறைக்கு செய்ய வேண்டியது என்ன? பொதுமக்கள் யோசனை
வால்பாறையில் மழை, வெள்ளம் ஓய்ந்த நிலையில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து பொதுமக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
வால்பாறை,
மே மாதத்தில் வெறும் 3 அடியாக இருந்து வந்த 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணையின் நீர்மட்டம் கிடுகிடு வென உயரத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்தஜூன் மாதம் 5–ந் தேதி முதல் தென் மேற்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியது. இதனால் வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகள், நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஜூலை மாதம் 1–ந் தேதி 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணை 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது.
தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது. இதனால் சோலையார்அணை தனது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் ஜூலை மாதம் 2–ந் தேதி முதல் தானாகவே அணையிலிருந்து வெளியேறும் சேடல்பாதை வழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்லத் தொடங்கியது.தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருந்ததாலும் அணைக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுக் கொண்டிருந்ததாலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 11–ந் தேதி அணையின் மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது.
மேலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை பொறுத்து மதகுகள் திறக்கப்படுவதும், அடைக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டேயிருந்தது.இந்த நிலையில் நடப்பு மாதத்தில் கடந்த 10 நாட்களாக திறக்கப்பட்டுவந்த அணையின் மதகுகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் தொடர்ந்து அணை 59–வது நாளாக முழு கொள்ளளவுடன் உள்ளத. இதனால் தொடர்ந்து சேடல்பாதைவழியாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்றுவருகிறது. குறிப்பாக மே மாதம் 25–ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை வால்பாறையில் முழுமையாக நின்றது.
இதற்கிடையில் ஏற்கனவே வால்பாறை பகுதியில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வால்பாறை நகர் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைத் தண்ணீர் புகுந்து ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது.இதே போல கக்கன்காலனி,காமராஜ்நகர் பகுதிகளிலும் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களாக வால்பாறை பகுதியில் வெயில் அடிப்பதால் தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள்,தொண்டுநிறுவனங்கள்,சமூகசேவை மையங்கள், அனைத்து அரசியல்கட்சியினர், பல்வேறு மதத்தினர், தேவாலயங்களைச் சேர்ந்தவர்கள் என்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து உதவிகள் செய்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் நிதி உதவிகள் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இந்த நேரத்திலேயே அனைத்து அரசுத் துறைகள் கொண்ட உயர் அதிகாரிகள் குழுவினர் வாழைத் தோட்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஆற்றுத் தண்ணீர் குடியிருப்புகளுக்குள் புகுவதற்கு என்ன காரணம், எந்த இடத்தில் ஆற்றை தூர்வாரினால் வரும் காலத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படாது என்பது குறித்தும், ஆற்றுத் தண்ணீர் தடையின்றி செல்வது குறித்தும், போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கமுடியும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல வால்பாறை–பொள்ளாச்சி மலைப்பாதை சாலை பழுதடைந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். ஆகவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் காலங்கடத்தாமல் வால்பாறை பகுதி சாலைகளை ஆய்வு செய்து இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். சாலைகள் முழுவதையும் ஆய்வு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் முன்கூட்டியே தடுப்புசுவர்கள் கட்டி சாலைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வால்பாறை தாலுகா பகுதி மக்கள் அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர். வால்பாறை பகுதி மக்களின் போக்குவரத்து தேவைக்காக இருப்பது இந்த ஓரே ஒரு சாலை மட்டும்தான் எனவே நெடுஞ்சாலைத்துறையினர் மலைப்பாதை சாலைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.