சீர்காழி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 100 பேர் கைது


சீர்காழி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் 100 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

சீர்காழி அருகே காரைமேடு, தென்னலக்குடி, அண்ணன்கோவில், காத்திருப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு செய்து இருந்தனர். இந்த கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை தற்போது வரை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி தென்னலக்குடி கடைவீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க முயற்சிக்காத தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விவசாயிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியலால் சீர்காழி-நாகை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story