கொடைக்கானலில், கார் டிரைவர் படுகொலை: அண்ணன்– தம்பி உள்பட 4 பேர் கைது


கொடைக்கானலில், கார் டிரைவர் படுகொலை: அண்ணன்– தம்பி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2018 5:45 AM IST (Updated: 29 Aug 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் கழுத்தை அறுத்து கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் அண்ணன்– தம்பி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். துணை நடிகையுடன் தொடர்பு இருந்ததால், நடிகையின் தந்தை கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில், கடந்த 25–ந் தேதி நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் அங்கு சென்று காரை திறந்து பார்த்தபோது அதற்குள் ரத்தம் உறைந்து கிடந்தது. ஆங்காங்கே மிளகாய் பொடியும் தூவப்பட்டிருந்தது. விசாரணையில் அந்த காரின் உரிமையாளர் கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (வயது 28) என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் கடந்த 24–ந் தேதி இரவு காரை எடுத்து கொண்டு வாடகைக்கு செல்வதாக கூறி சென்ற பிரபாகரன் பின்னர் வீடு திரும்பவில்லை என தெரியவந்தது. உடனே அவருடைய செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினர். அதன் மூலம் பிரபாகரன் செல்போன் செயல்பாட்டை போலீசார் ஆய்வு செய்தனர். கடைசியாக அவர், கார் நின்ற இடத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செண்பகனூரை அடுத்த சிட்டிடவர் என்னுமிடத்தில் செல்போன் இருந்தது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் 50 அடி பள்ளத்துக்குள் கழுத்து அறுத்து பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

உடனே அவருடைய உடலை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கொலையாளிகளை பிடிக்க கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி, இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே பிரபாகரனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்த கார் டிரைவரும், பிரபாகரனின் நண்பருமான செந்தில்குமார் (37) கடந்த 24–ந் தேதி இரவு பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் கூறிய தகவலின் பேரில் கொடைக்கானல் ஆனந்தகிரி 7–வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (28), அண்ணாநகரை சேர்ந்த முகமது சல்மான் (20), அவருடைய தம்பி முகமது இர்ப்பான் (18) ஆகிய 3 பேரை பிடித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செந்தில் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூரியநாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:–

சென்னை திருவான்மியூர் வால்மிகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். இவருடைய மனைவி விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். விஷ்ணுபிரியா துணை நடிகையாக உள்ளார். நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். அவருடைய தந்தை சூரியநாராயணன். அவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் வீடு மற்றும் நிலம் சொந்தமாக உள்ளது.

இந்த நிலையில் ரமேஷ்கிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டதால், அவரை கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைத்து உணவு கொடுத்து பராமரித்து வருகின்றனர். அவரை பார்ப்பதற்கு விஷ்ணுபிரியா சென்னையில் இருந்து வந்து சென்றுள்ளார். அப்போது கார் டிரைவர் பிரபாகரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபிரியா, கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வந்து தங்கியுள்ளார். இதனையறிந்த சூரியநாராயணன் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பிரபாகரனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரபாகரனின் புகைப்படத்தையும் அவருக்கு செல்போனில் அனுப்பியுள்ளார். பின்னர் கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு விஷ்ணுபிரியா திரும்பி விட்டார்.

செல்போனில் பிரபாகரனின் படத்தை பார்த்து ஆத்திரமடைந்த சூரியநாராயணன் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக கொடைக்கானலில் கார் டிரைவராக உள்ள செந்திலிடம் ரூ.3½ லட்சமும், 13 சென்ட் நிலம் தருவதாக அவர் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து செந்தில் கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த மணிகண்டனை தொடர்பு கொண்டார்.

இதையடுத்து பிரபாகரனை கொலை செய்ய மணிகண்டனின் வங்கி கணக்கில் முதற்கட்டமாக சூரியநாராயணன் ரூ.50 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார். அதன் பின்பு கடந்த 24–ந் தேதி பிரபாகரனை செல்போனில் தொடர்பு கொண்டு குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதிக்கு வரும்படி செந்தில் அழைத்துள்ளார். அதன்படி அவர் காரை எடுத்து கொண்டு அங்கு சென்றுள்ளார். செந்தில், மணிகண்டன், பிரபாகரன், அண்ணாநகரை சேர்ந்த முகமது சல்மான் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து காரில் மணிகண்டன், பிரபாகரன், முகமது சல்மான் மற்றும் அங்கு வந்த அவருடைய தம்பி முகமது இர்ப்பான் ஆகிய 4 பேரும் புறப்பட்டனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வருவதாக செந்தில் கூறியுள்ளார்.

இதனால் குறிஞ்சி ஆண்டவர் கோவில் ரோட்டில் கோஹினூர் அரசு பங்களா அருகே காரை நிறுத்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த பிரபாகரனின் கண்ணில் மணிகண்டன் மிளகாய் பொடியை தூவியுள்ளார். பின்னர் பிரபாகரனின் கழுத்தில் கத்தியால் முகமது சல்மான் அறுத்துள்ளார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மணிகண்டனும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு, உடலை காரில் ஏற்றினர். பின்பு அவருடைய உடலை சிட்டிடவர் வனப்பகுதியில் வீசி விட்டு சென்றுள்ளனர். அவருடைய காரை உகார்தே நகர் பகுதியில் நிறுத்தி விட்டு, போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக காரில் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் கொடைக்கானல் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story