ஈரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது, பெயிண்டர் கைது
ஈரோட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியை அவருடைய பெற்றோர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுதொடர்பாக சிறுமியிடம் அவருடைய பெற்றோர் கேட்டனர். அப்போது அவர், ஈரோடு வெண்டிபாளையத்தை சேர்ந்த அக்கீம் (வயது 48) என்பவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அழுது கொண்டே கூறிஉள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அக்கீம் பெயிண்டராக வேலை செய்து வருவதும், அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமடைய செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்கீம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த அக்கீமை போலீசார் நேற்று கைது செய்தனர்.