நாராயணசாமியின் கருத்துகளை காங்கிரசாரே ஏற்கமாட்டார்கள் - பாரதீய ஜனதா விமர்சனம்
முதல்–அமைச்சர் நாராயணசாமியின் கருத்துகளை காங்கிரசாரே ஏற்கமாட்டார்கள் என்று பாரதீய ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
புதுச்சேரி,
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளுக்காக வெளிநாட்டினர் வழங்கும் நிதியை கடந்த 2004–ம் ஆண்டு தடை செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு. தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் அதே கொள்கையை கடைபிடித்து வெளிநாட்டினர் வழங்கும் நிதியுதவியை ஏற்கமாட்டோம் என்று அறிவித்துள்ளது.
அதோடு நிதியுதவி வழங்க முன்வரும் நாட்டிற்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, பிரதமர் மோடிதான் கேரள மக்களுக்கு வழங்கப்படும் வெளிநாட்டு நிதியை தடுத்து வருவதாக மக்களை திசை திருப்பி பேசி வருவதை புதுச்சேரி பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது.
கேரள மாநில முதல்–அமைச்சரே பிரதமர் மோடியின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை பாராட்டி வரும் நிலையில் நாராயணசாமியின் இத்தகைய பேச்சு அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. மன்மோகன்சிங்கின் நிழல் பிரதமராக இருந்த நாராயணசாமி இப்படி பேசி தன்னை தரம் தாழ்த்தி கொண்டிருக்கிறார். அவரது எந்த கருத்தையுமே காங்கிரஸ் கட்சியினரே ஏற்க தயாராக இல்லை.
புதுச்சேரியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும், காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்துக்கும் குஸ்தி அரசியல் நடைபெற்று வருவது உலகே அறிந்த ஒன்று. அப்படி இருக்கும்போது வாஜ்பாய் அஸ்தி அரசியல் பற்றி பேச நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. வாஜ்பாய் அஸ்தியை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவுக்கு இல்லை.
பாரதீய ஜனதா ஆட்சியில் ரபேல் ராணுவ ஊழல் நடைபெற்றிருப்பதாக பொய்யான குற்றச்சாட்டை கூறிவரும் நாராயணசாமி தனது இதுபோன்ற பேச்சை நிறுத்தாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும். பாரத ரத்னா வாஜ்பாயின் அஸ்தி பற்றி பேசி அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நாராயணசாமி உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.