அரசு அலுவலகங்களில் ஆதாயத்துக்காக செயல்படும் ‘கருப்பு ஆடுகள்’ உள்ளன - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து


அரசு அலுவலகங்களில் ஆதாயத்துக்காக செயல்படும் ‘கருப்பு ஆடுகள்’ உள்ளன - ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 29 Aug 2018 4:45 AM IST (Updated: 29 Aug 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

அரசு அலுவலகங்களில் ஆதாயத்துக்காக செயல்படும் ‘கருப்பு ஆடுகள்‘ உள்ளதாக ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.

மதுரை,

தூத்துக்குடி அய்யன்அடைப்பை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் பிளஸ்–2 படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2013–ம் ஆண்டு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக டிரைவர் பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் அந்த பதவிக்கான நேர்காணலிலும் பங்கேற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்னரும் அவருக்கு பணியிடம் ஒதுக்கவில்லை என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மனுதாரர் டிரைவர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, நேர்காணலில் கலந்து கொண்டார். பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரவு நகல் தயாரிக்கும் போது, மனுதாரர் குறிப்பிட்ட பணிக்கான வயது வரம்பை கடந்து விட்டார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பணி நியமன உத்தரவு நகல் மனுதாரருக்கு அனுப்பாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், மனுதாரர் அந்த உத்தரவுநகலை சட்டவிரோதமாக பெற்று வழக்கு தொடர்ந்துள்ளார்“ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–

அனைத்து அரசு அலுவலகங்களிலும் கருப்பு ஆடுகள் உள்ளன. இந்த ‘கருப்பு ஆடுகள்‘ ஏதேனும் ஆதாயத்துக்காக இதுபோன்று செயல்பட்டு, உத்தரவுகளை தனிநபர்களுக்கு கொடுத்து உதவுகின்றனர். அதற்கு முன்னுதாரணமான வழக்கு இது. மனுதாரருக்கு பணி நியமன உத்தரவு அதிகாரப்பூர்வமாக அனுப்பி வைக்கப்படவில்லை. வெறும் தட்டச்சு செய்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவு நகலை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றிய அவர், அதன் அடிப்படையில் சட்டப்படியான எந்த உரிமையையும் கோரக்கூடாது. அரசு உத்தரவை சட்டவிரோதமாக கைப்பற்றி வைத்திருப்பது சமூகத்துக்கு ஆபத்தாக முடியும்.

அதேநேரத்தில், இந்த உத்தரவு நகல் தயாரிக்கப்பட்ட போது, அந்த அலுவலகத்தில் பணியில் இருந்தவர்கள் யார்–யார்? என்ற விவரங்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story