உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் பட்டதாரி பெண்ணை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு


உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் பட்டதாரி பெண்ணை தாக்கி 6 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 29 Aug 2018 3:15 AM IST (Updated: 29 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே பட்டதாரி பெண்ணை தாக்கி 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூந்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ரம்யா(வயது 25). பி.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு பரணிதரன்(3) என்ற மகன் உள்ளான். நேற்று மதியம் ரம்யா தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த பரணிதரனை அழைத்து வருவதற்காக குருபீடபுரம் கிராமத்துக்கு ஒரு ஸ்கூட்டரில் நேற்று மதியம் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்த தனது மகனுடன் ஸ்கூட்டரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். கூந்தலூர் கிராம சாலையில் வந்து கொண்டிந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில், பின்னால் அமர்ந்திருந்தவர் திடீரென ரம்யா ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரை எட்டி உதைத்தார்.

இதில் நிலைதடுமாறிய ரம்யாவும், பரணிதரனும் ஸ்கூட்டருடன் கீழே விழுந்தனர். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்த வந்த அந்த மர்மநபர் திடீரென ரம்யாவை தாக்கி, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தன்னுடன் வந்த நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் ரம்யா லேசான காயமடைந்தார். பரணிதரன் காயமின்றி தப்பினான். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் ஸ்கூட்டரில் மகனுடன் சென்ற பட்டதாரி பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் வழிமறித்து தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story