விழுப்புரம் பஸ்நிலையத்தில் நின்றவரை அழைத்து சென்று கற்பழிக்க முயற்சி 2 பேர் கைது
சாலையோரம் பெண் காயங்களுடன் கிடந்த வழக்கில், அவரை விழுப்புரம் பஸ்நிலையத்தில் இருந்து அழைத்து சென்று கற்பழிக்க முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியம்புலியூர்–செங்கமேடு சாலையில் கடந்த 25–ந்தேதி சுமார் 45 வயதுடைய பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரை விக்கிரவாண்டி போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சுயநினைவு இல்லாமல் அந்த பெண் இருந்ததால் அவர் யார் என்று இதுவரையில் தெரியவில்லை. இந்த நிலையில் சம்பவ இடத்தில் கிடந்த ஒரு செல்போனை கைப்பற்றி விக்கிரவாண்டி போலீசார் விசாரித்தனர். அதில், அந்த செல்போன் சிந்தாமணி கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 38) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இதையறிந்த பிரபு, சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் ரபிக்கிடம் சரணடைந்தார். இதையடுத்து போலீசசர் அவரை கைது செய்து விசாரித்தனர். அதில், நான், எனது நண்பர் புஷ்பராஜ்(34) என்பவருடன் சேர்ந்து கடந்த 25–ந்தேதி விழுப்புரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தோம்.
அப்போது, அவர் தான் மூங்கில்பட்டு செல்ல வேண்டும் என்றார். எங்களுடன் வந்தால் அங்கு கொண்டு விடுகிறோம் என்று தெரிவித்தோம். எங்களை நம்பி, மோட்டார் சைக்கிளில் வந்தார். கப்பியாம்புலியூர் அருகே செங்கமேடு சாலையில் சென்ற போது ஏன் இங்கு வந்தீர்கள் என்று கேட்டார். அப்போது எங்களுடன் உல்லாசமாக இருந்து விட்டு போ, என்று கூறினோம்.
ஆனால் அதற்கு அவர் உடன்படவில்லை. இதையடுத்து நாங்கள் இருவரும் அந்த பெண்ணை தாக்கினோம். அதில் அவர் சுய நினைவை இழந்து மயங்கி விழுந்தார். உடன் நாஙக்ள் அப்படியேவட்டு விட்டு ஓடி வந்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பிரபு கொடுத்த தகவலின் பேரில் புஷ்பராஜையும் போலீசார் கைது செய்தனர். பஸ்நிலையத்தில் தனியாக நின்ற பெண்ணை அழைத்த சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.