சமயபுரத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கல்லால் அடித்து கொலை போலீசார் விசாரணை


சமயபுரத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கல்லால் அடித்து கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 Aug 2018 3:45 AM IST (Updated: 29 Aug 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்தில் திருட்டில் ஈடுபட்டவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் பிணமாக கிடப்பதாக சமயபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன், சப்–இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். இறந்தவருக்கு சுமார் 55 வயது இருக்கலாம். ஆனால் அவரை பற்றி விவரம் உடனடியாக தெரிவில்லை.

இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலின் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை கோவிலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாவலர்கள் வினோத், ஜம்புகேஸ்வரன், குமரன் ஆகியோர் பிடித்து விசாரித்துள்ளனர்.


அப்போது அந்த பகுதியில் நடந்து வரும் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்படும் 5 இருப்புச்சட்டிகள், சுத்தியல் ஆகியவற்றை அந்த நபர் திருடி சாக்குப்பையில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை அழைத்து சென்று அவர்களின் கண்காணிப்பு அதிகாரியான தங்கராஜிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த நபர் திருடிய பொருட்களை வாங்கிக்கொண்டு அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறியுள்ளனர்.

இந்நிலையிலேயே நேற்று காலை அவர் டாஸ்மாக் கடை எதிரே உள்ள பட்டறை பகுதியில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது, போலீசாருக்கு தெரியவந்தது.


இதனால் காலையிலேயே சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்து வரும் அப்பகுதியில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அப்பகுதியில் அந்த நபர் திருட முயன்றபோது, யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமயபுரத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story