அரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் வனவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது


அரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் வனவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

அரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் சேமநல நிதியில் பணம் அனுமதிக்க வனவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு வனத்துறையின் சேலம் வனப்பொறியாளர் சரகத்தில் தர்மபுரி பிரிவு வனவராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன் (வயது 49). இவர் தனது சேமநல நிதியில் இருந்து தனது தேவைக்காக ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்தை பெற அரூரில் உள்ள வன பொறியியல் கோட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தினை அனுமதிக்க அந்த பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரியும் தனலட்சுமி (57) என்பவர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வனவர் ரவிச்சந்திரன் இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதல்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை நேற்று அரூர் வனக்கோட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளர் தனலட்சுமியிடம் ரவிச்சந்திரன் கொடுத்தார்.

அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சுப்பிரமணி தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய தனலட்சுமியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரம் லஞ்ச பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வனத்துறையில் பணிபுரியும் வனவரிடம் அதே துறையில் பணிபுரியும் கண்காணிப்பாளரே லஞ்சம் பெற்று சிக்கிய சம்பவம் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story