பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: இளநீர் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு; 5 பேர் கைது
திருப்பூரில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக இளநீர் வியாபாரியை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர்–தாராபுரம் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. அந்த ஆஸ்பத்திரி அருகே அந்த பகுதியை சேர்ந்த இளைய பாரதி (வயது 35) என்பவர் இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் இளைய பாரதியை அரிவாளால் வெட்டினர். மேலும், ஆயுதங்களால் தாக்கவும் செய்தனர்.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டதும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து புறநோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அந்த பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த முருகன் (34), காளிமுத்து (28), ஜெய் கணேஷ் (29), இம்ரான் (24), மணிகண்டன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் முருகன் ஆம்புலன்சு டிரைவர் ஆவார்.
இவருக்கும் இளைய பாரதிற்கும் பணம் கொடுக்கல்–வாங்கல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த 4 பேரை அழைத்து வந்து இளையபாரதியை அரிவாளால் வெட்டவும், தாக்கவும் செய்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.