முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு: மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி திருச்சி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு: மு.க.ஸ்டாலின் 24-ந்தேதி திருச்சி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 31 Aug 2018 4:45 AM IST (Updated: 31 Aug 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட அரசு தலைமை வழக்கறிஞராக இருப்பவர் கே.சம்பத் குமார். இவர் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மீது ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 21-6-2018 அன்று தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவின் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் (தற்போது தி.மு.க. தலைவர்) எம்.எல்.ஏ. தமிழக அரசு மீதும், தமிழக முதல்-அமைச்சர் பற்றியும் அவதூறாக பேசி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு கடந்த 17-7-2018 அன்று விசாரணைக்கு ஏற்கப்பட்டு, மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 30-ந்தேதி அவர் திருச்சி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இந்த வழக்கு, திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மு.க.ஸ்டாலின் சார்பில் தி.மு.க. வழக்கறிஞர்கள் ஓம்பிரகாஷ், பாஸ்கர், அருள்மொழி வர்மா ஆகியோர் ஆஜராகி ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “மறைந்த கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று (நேற்று) நடைபெறுவதால் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை” என கூறப்பட்டு இருந்தது.

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி குமரகுரு, அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Next Story