ஆட்சியை கவிழ்க்கும் தி.மு.க.வின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எடப்பாடி பழனிசாமி பேட்டி


ஆட்சியை கவிழ்க்கும் தி.மு.க.வின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 31 Aug 2018 4:45 AM IST (Updated: 31 Aug 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் தி.மு.க.வின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

உபரிநீர்

கேள்வி:- உபரிநீரை தேக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறீர்கள்?

பதில்:- நான் ஏற்கனவே தெரிவித்தபடி, மேட்டூர் அணை உபரிநீரை சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 96 ஏரிகளை நிரப்புவதற்கான வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது அதற்கு விரிவான அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

கேள்வி:- தடுப்பணை அமைக்கும் பணி எந்தநிலையில் இருக்கிறது?

பதில்:- தடுப்பணைகளை பொறுத்தவரை இந்த அரசு ஏற்கனவே மூன்றாண்டுகால திட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 62 தடுப்பணைகள் கட்டுவதற்காக ரூ.292 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன. அதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது.

முக்கொம்பு அணை

கேள்வி:- முக்கொம்பு அணை முழுவதும் உடையக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறதே?

பதில்:- தவறான கருத்து, ஒரு பகுதி உடைந்திருக்கிறது. அந்தப் பகுதியை சரிசெய்வதற்காக தலைமை பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறையை சேர்ந்த செயலாளர்கள் அங்கேயே முகாமிட்டு அந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அந்த பணி நிறைவுபெற்றுவிடும். அதற்கு கீழ்ப்புறமாக 100 மீட்டர் தள்ளி, புதிதாக ஒரு கதவணை கட்டுவதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 15 மாதத்திலிருந்து 18 மாதத்திற்குள் அந்த அணை கட்டிமுடிக்கப்படும்.

கேள்வி:- அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து எவ்வளவு திட்டங்கள் இதுவரை தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது?

பதில்:- அ.தி.மு.க. அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை ரூ.22,640 கோடியே 29 லட்சம் மதிப்பிலான 41,887 முடிந்த பணிகளை துவக்கிவைத்தும், ரூ.19,101 கோடியே 84 லட்சம் மதிப்பிலான 7,597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளோம். மொத்தத்தில் தற்போது வரை ரூ.41,742 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டிலான 49,484 பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல்

கேள்வி:- வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ள இருக்கிறது?

பதில்:- நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்கும்போது என்ன அறிவிக்க முடியும்?

கேள்வி:- போட்டித்தேர்வு எழுதியும் பணி கிடைக்கவில்லையென்று வேலூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டாரே?

பதில்:- படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நாட்டினுடைய நிலைமையை கருதி தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தவறான நிலைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டாமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:- இந்த பிரச்சினைக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டுமென்று டாக்டர் ராமதாஸ் சொல்கிறாரே?

பதில்:- அவர் எல்லாவற்றையும் தான் சொல்லிக்கொண்டிருக்கிறார், எதை சொல்லவில்லை. அவர்கள் என்னென்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமல்லவா? புதிதாக மரம் நட்டுக்கொண்டிருக்கின்றார். இயற்கை வளம் குறைந்ததே அவர்களால் தான். அது எல்லோருக்கும் தெரியும்.

கவிழ்க்க முடியாது

கேள்வி:- அ.தி.மு.க.வில் விரிசல் வந்தபோது தி.மு.க. சார்பில் கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது. இப்போது தி.மு.க.விலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- அது அவர்களது உட்கட்சி பிரச்சினை. எங்களை பொறுத்தவரை ஜனநாயக முறைப்படி செயல்பட வேண்டுமென்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அடுத்தவர்களை பற்றி எப்போதும் பேசுவதில்லை. பிரச்சினை ஏற்படும்போது அதை வைத்து அரசியல் செய்பவர்களும் நாங்கள் அல்ல. இதெல்லாம் தி.மு.க.விற்கு கைவந்த கலை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று நினைக்கிறார்களோ அதையெல்லாம் செய்வார்கள்.

அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம், ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கம். தி.மு.க. மட்டுமல்ல, இதுபோல் எத்தனை தி.மு.க. வந்தாலும் இந்த கட்சியையும் உடைக்க முடியாது, இந்த ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

கேள்வி:- கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு உங்களுக்கு ஏதாவது அழைப்பு வந்ததா?

பதில்:- அப்படிப்பட்ட நிலைமை எங்களுக்கு வராது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story