தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தகவல்


தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தகவல்
x
தினத்தந்தி 31 Aug 2018 3:30 AM IST (Updated: 31 Aug 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறினார்.

ஆய்வு கூட்டம்

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வழக்குகள்

ஒவ்வொரு மாவட்டத்திலும் தாழ்த்தப்பட்டோருக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் எவ்வாறு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன, என்ன காரணத்துக்காக நிலுவையில் உள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்ற வழக்குகள் மிகவும் குறைந்து உள்ளன. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து, வழக்கு விசாரணை அதிகாரி மற்றும் அரசு வக்கீலிடம் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் சுய உதவிக்குழுவினர் துப்புரவு பணி காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகின்றனர். அதில் 500 பேர் உள்ளனர். அவர்களை பிரதம மந்திரி சுரக்ஷா யோஜனா, பிரதம மந்திரி பீமா யோஜனா திட்டங்களில் சேர்ப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. தாட்கோவில் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

விசாரணை அறிக்கை

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் துப்பாக்கி சூடு நடந்தது. இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. விரைவில் அதாவது இன்னும் 15 நாட்களில் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story