விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2018 5:26 AM IST (Updated: 31 Aug 2018 5:26 AM IST)
t-max-icont-min-icon

பஸ் பாஸ் வழங்கக்கோரி விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்புகள் வரை உள்ள இந்த கல்லூரியில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தினந்தோறும் கல்லூரிக்கு பஸ்களில் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ்களில் செல்லும் மாணவர்களுக்கு இதுவரை பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. இதுதவிர கல்லூரி வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சரியாக பராமரிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மாணவர்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை. இதுபோன்ற கோரிக்கைகள் குறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் அனைவரும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து அறிந்த விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் ஆகியோர், பஸ் பாஸ் வழங்கவும், உரிய நேரத்தில் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போலீசார் மற்ற கோரிக்கைகள் குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story