புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சோதனை


புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த சோதனை
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 6:39 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

சிவகங்கை,

அடுத்தாண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை செயல் விளக்கம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

பெங்களுரு பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் துபே தலைமையில் வந்த பொறியாளர்கள் குழுவினர் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:–

சிவகங்கை மாவட்டத்திற்கு பெங்களுரில் இருந்து 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1800 மின்னணு கட்டுப்பாட்டு கருவி மற்றும் 1800 வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விவரத்தை தெரிவது குறித்த எந்திரம் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல் நிலை பரிசோதனைகளை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு எந்திர பராமரிப்பு அலுவலர் ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story