என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் சந்தேகம் இருக்கிறது மரஅறுவை ஆலை அதிபர், தந்தை குற்றச்சாட்டு


என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் சந்தேகம் இருக்கிறது மரஅறுவை ஆலை அதிபர், தந்தை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் சந்தேகம் இருப்பதாக மரஅறுவை ஆலை அதிபர் மற்றும் அவருடைய தந்தை குற்றம் சாட்டி உள்ளனர்.

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை சாய்பாபா காலனி காமராஜர் ரோட்டில் உள்ள மரஅறுவை ஆலை அதிபர் முன்னா வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனைக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே வடகோவை, துடியலூர், கண்ணப்ப நகர் பகுதிகளில் உள்ள சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் பலர் கோவை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் லட்சுமியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

அதில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போதெல்லாம் ஷாஜகான் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். ஆனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எவ்வித அனுமதியும் இல்லாமல் முன்னா வீட்டில் சோதனை செய்து இருப்பது ஷாஜகான் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அவருடைய வீட்டில் 120 குழந்தைகள் அரபி மொழி கற்று வருகிறார்கள். அதிகாரிகள் நடத்திய சோதனையால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மரஅறுவை ஆலை அதிபர் முன்னா, அவருடைய தந்தை ‌ஷஜகான் ஆகியோர் தனித்தனியாக வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அதில் முன்னா கூறி இருப்பதாவது:–

நான் எனது மனைவி, குழந்தையுடன் வெளிநாட்டில் தங்கி, வேலை செய்து வருகிறேன். கோவையில் உள்ள எனது வீடு, மரஅறுவை ஆலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் எனது பெற்றோரை அழைத்து வெளிநாட்டில் நான் இருக்கும் முகவரி, எனது செல்போன் எண் ஆகியவற்றை வாங்கினார்கள். பின்னர் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு சில கேள்விகளை கேட்டனர். நான் முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் என்னை பார்ப்பதற்காக எனது பெற்றோர் வெளிநாடு வந்து உள்ளனர். ஆனால் என்னிடம் விசாரணை நடத்தியதற்கு பிறகு, எனது வீட்டில் யாருமே இல்லாத நேரத்தில் வீடு மற்றும் மரஅறுவை ஆலை ஆகியவற்றில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து இருப்பதில் சந்தேகம் இருக்கிறது. என்னை இந்த வழக்கில் வேண்டும் என்றே சேர்க்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஷாஜகான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:– சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் என்னை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது எனது மகன் தொடர்பான சில கேள்விகளை கேட்டனர். நான், வெளிநாட்டில் அவர் இருக்கும் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்தேன். அவரிடம் தொடர்பு கொண்டு அதிகாரிகள் பேசியும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நான் எனது மகனை பார்ப்பதற்காக வெளிநாடு வந்துவிட்டேன். நான் ஊரில் இல்லாத நேரத்தில் எனது மகனின் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏதோ நாங்கள் தலைமறைவாக இருக்கிறதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். நாங்கள் யாரும் தலைமறைவாக இல்லை. சாய்பாபா காலனியில் உள்ள அந்த வீட்டில் பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் திடீரென்று சோதனை செய்ததால் அவர்கள் கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அத்துடன் எங்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு நல்ல முடிவு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story