எதிர்வரும் பருவமழை காலத்தில் சிதம்பரம் பகுதி வெள்ளத்தால் பாதிக்காமல் தடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்
எதிர்வரும் பருவமழை காலத்தில் சிதம்பரம் பகுதி வெள்ளத்தால் பாதிக்காமல் தடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
கர்நாடக அரசு தமிழக விவசாயிகளின் பயன்பாட்டுக்கு தண்ணீர் திறக்காமல் தங்களுக்கு மழை வெள்ள ஆபத்து ஏற்பட்டு விட்டது என்று தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை வடிகாலாக கர்நாடகா பயன்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கூடிய நிலையை பொதுப்பணித்துறை மேற்கொண்டது. எனவே கொள்ளிடம் கரையோரம் உள்ள 22 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசின் தவறான அணுகு முறையே காரணமாகும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பகுதியில் ஏரி, குளங்கள் வாய்க்கால்கள் எதுவும் தூர்வாரப்படாமல் உள்ளது. தூர் வாரும் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாக பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளா மாநிலம் தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் பருவமழை பெய்யும். எனவே தற்போதைய வெள்ளத்துக்கே பாதிக்கப்பட்ட சிதம்பரம் பகுதி, பருவ மழையின்போது வெள்ளக்காடாக மாறும் நிலை ஏற்படும். இதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.