மாவட்ட செய்திகள்

சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் + "||" + Limestone Concerning setting up a mine Public Opinion Demand Meeting

சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்

சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்
பெரியத்திருக்கோணத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உத்தரவாதம் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலை தனது சொந்த பயன்பாட்டிற்காக புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை பெரியத்திருக்கோணம் கிராமத்தில் அமைக்க உத்தேசித்துள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பெரியத்திருக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.


கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நலினா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரியத்திருக்கோணத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த தனியார் சிமெண்டு நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த விவசாய குடும்பத்தினருக்கு இதுவரை வேலை வழங்காமல், வெளிமாநிலத்தினருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். எனவே இங்கு சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்கவுள்ள தனியார் சிமெண்டு ஆலை, இப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், என்றார்.

இளவரசன் என்பவர் பேசுகையில், சுண்ணாம்புக் கல் சுரங்கங்கள் குறித்து மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை சுற்றியுள்ள கிராமத்துக்கு செலவிடப்படும் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதி மற்றும் மாவட்ட பேரிடர் நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், என்றார். தொடர்ந்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்த கலெக்டர் விஜயலட்சுமி, அவர்களது கருத்து பதிவுகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதில் மாசுக்கட்டுப்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர்கள் இளமதி, பிரபாகரன் மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை