குமரி மாவட்ட வரைவு பட்டியல் வெளியீடு: 14 லட்சத்து 47ஆயிரத்து 101 வாக்காளர்கள் உள்ளனர்


குமரி மாவட்ட வரைவு பட்டியல் வெளியீடு: 14 லட்சத்து 47ஆயிரத்து 101 வாக்காளர்கள் உள்ளனர்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 8:27 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். மொத்தம் 14 லட்சத்து 47ஆயிரத்து 101 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நாகர்கோவில்,

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட, மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரும் நாகர்கோவில் கோட்டாட்சியருமான ஜானகி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:–

கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 437 வாக்காளர்களும், நாகர்கோவில் தொகுதியில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 417 வாக்காளர்களும், குளச்சல் தொகுதியில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 708 வாக்காளர்களும், பத்மநாபபுரம் தொகுதியில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 318 வாக்காளர்களும், விளவங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 756 வாக்காளர்களும், கிள்ளியூர் தொகுதியில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 465 வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

11–1–2018 முதல் இதுவரையில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இந்த வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த 1–6–2018 முதல் 30–6–2018 வரை வாக்குசாவடி நிலை அலுவலர்களால் வீடு–வீடாக சென்று பெயர் சேர்த்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், இடம் பெயர்ந்த, இறந்த நபர்களை நீக்கம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

10–7–2018 அன்று கலெக்டர் தலைமையில் நடந்த அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் வாக்குச்சாவடி மறுவரையறை குறித்து பட்டியல் வழங்கப்பட்டது. அதுபற்றிய ஆட்சேபனைகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இறுதி செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒப்புதல் பெறப்பட்ட வாக்கு சாவடிமையத்தின் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,694 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன.   

  அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 8–ந் தேதி, 22–ந் தேதி, அக்டோபர் மாதம் 6–ந் தேதி மற்றும் 13–ந் தேதி ஆகிய 4 நாட்கள் கிராம சபை கூட்டத்தினை கூட்டி பொதுமக்கள் அந்தந்த பாகத்திற்குரிய வாக்காளர் பட்டியலினை படிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு ஊராட்சி பொறுப்பு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாதவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர் க்க படிவம்–6–ஐ பூர்த்தி செ ய்து வழங்க வேண்டும். வாக் காளர் பட்டியலில் தவறாக உள்ள வாக்காளர் பெயர், உறவுமுறை, புகைப்படம் போன்ற விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8–ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ–ஐயும், இறந்துபோன, இடம்பெயர்ந்த, இருமுறை இடம்பெற்ற வாக்காளர்களின் பெயரினை நீக்கம் செய்யபடிவம் 7 மற்றும் அதனுடன் இறந்தவர்களின் இறப்புசான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 வெளிநாடுவாழ் இந்தியர்கள் படிவம்–6 ஏ–ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

சிறப்பு முகாம் அல்லாத நாட்களில் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள்  படிவங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் அதுகுறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலரிடம் அல்லது தாசில்தார் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

 புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாகவும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தியும் அரசு இ–சேவைமையத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

இவை தவிர வேறு தனியார் மையங்கள் எவற்றிலும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அவ்வாறு ஏதேனும் தனியார் மையங்களில், கம்ப்யூட்டர் மையத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதாக தெரியவந்தால் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 04652– 279086 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுகன்யா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் (பொறுப்பு) ஆறுமுக நயினார், தோவாளை தாசில்தார் சுரேஷ்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியன், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story