பாராளுமன்றம் நோக்கி 5–ந்தேதி பேரணி: தஞ்சையில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம்


பாராளுமன்றம் நோக்கி 5–ந்தேதி பேரணி: தஞ்சையில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 10:21 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்றம் நோக்கி வருகிற 5–ந்தேதி பேரணி செல்வதற்காக தஞ்சையில் இருந்து விவசாயிகள் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்,


அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி வருகிற 5–ந்தேதி டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல உள்ளனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக தஞ்சை மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 50 பேர் தஞ்சையில் இருந்து சோழன்எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் மாவட்ட தலைவர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பக்கிரிசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணை செயலாளர் அன்பு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலையில் 50–க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்னை சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார்கள்.


இது குறித்து மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், ‘‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வேளாண்மை துறையை நெருக்கடிக்குள் தள்ளி உள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. விவசாயத்திற்கான மானியங்கள் குறைக்கப்பட்டு இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

மேலும் இயற்கை சீற்றங்களாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற பெரும் நெருக்கடியில் உள்ள விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்திடக்கோரியும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை அறிவிக்கக்கோரியும், விவசாய கடன்களை ரத்து செய்யக்கோரியும் பாராளுமன்றம் நோக்கி பேரணி நடைபெறுகிறது’’என்றார்.

Next Story