வருமான வரித்துறை கடிதம் கொடுத்த பிறகும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல


வருமான வரித்துறை கடிதம் கொடுத்த பிறகும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரித்துறை கடிதம் கொடுத்த பிறகும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல என்று தஞ்சையில் முத்தரசன் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாட்டில் உள்ள முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துக்கொண்டிருக்கிறது. தற்போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்-அமைச்சர் அவரை பதவி விலக சொல்ல வேண்டும் அல்லது முதல்-அமைச்சரே பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு காரணம் துணை முதல்-அமைச்சர் மீதும் முதல்-அமைச்சர் மீதும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் நடவடிக்கை எடுத்தால், அவர் இவர்களை கேள்வி கேட்பார். இது மட்டும் இன்றி வேறு சில அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் விவரிக்க தொடங்குவார். இப்படி அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றம் சாட்ட நேரிடும். எனவே அவர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். ஆனால் அது சரியல்ல.

வருமான வரித்துறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சரியல்ல உடனடியாக முதல்-அமைச்சர் நட வடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள அரசு எதார்த்ததிற்கு புறம்பான விழாக்களை நடத்தி வருகிறது. காவிரி கடைமடை பகுதிக்கு செல்லாத நிலையில் அணைகள் உடைந்து வீணாக காவிரிநீர் கடலில் மீண்டும் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் உணர்ந்து இப்போதாவது தூர்வாரும் பணியை அவசர காலத்தில் செய்து தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்த பல கூலி தொழிலாளர்கள் திருப்பதிக்கு மரம் வெட்டும் பணிக்கு செல்லும்போது ஆந்திர அரசு அவர்களை சுட்டுக் கொல்லும் வேலையை செய்து வருகிறது. உண்மை குற்றவாளிகள் வெளியில் சுற்றித்திரிந்து கொண்டுதான் உள்ளனர். ஏற்கனவே 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story