பெரம்பலூர் (தனி) -குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


பெரம்பலூர் (தனி) -குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் (தனி) -குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் சாந்தா வெளியிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 40 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சாந்தா வெளியிட வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். இதையடுத்து கலெக்டர் சாந்தா கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2019 அன்று தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் நேற்று முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. மேலும் வருகிற 8, 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம் பிரிவை கிராம சபை, ஊராட்சி மன்றம், குடியிருப்போர் நலச்சங்க கூட்டங்களில் படித்து பெயர்களை சரிபார்த்தல் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

வருகிற 9, 23-ந்தேதி, அடுத்த மாதம் 7, 14-ந்தேதிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2019 அன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து தகுதியுள்ள நபர்களையும் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களையும் சிறப்பு முகாம் நாட்களில் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) சேதுராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாரதி தாசன் உள்ளிட்ட அலுவலர் களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி வெளியிடப்படுகின்ற வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போது 332 வாக்கு சாவடிகளாகவும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் தற்போது 320 வாக்கு சாவடிகளாவும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன.

Next Story