ரூ.67¾ லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் திருடிய வழக்கில் 2 பேர் கைது
ரூ.67¾ லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் அப்பாச்சிநகர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 43). இவர் அந்த பகுதியில் உள்ள ஜி.டி.என். என்ஜினியரிங் இந்தியா லிமிடெட் என்ற நூல் நிறுவனத்தில் கிளை மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு ஆர்டரின் பெயரில் நூல் பண்டல்களை வாங்கி கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் ஆர்டரின் பேரில் கடந்த ஜூலை மாதம் 11–ந்தேதி புனேயில் இருந்து நாமக்கல் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த புஷ்பராஜ் என்பவருக்கு சொந்தமான 2 கன்டெய்னர் லாரிகளில் நூல் பண்டல்கள் ஏற்றி கொண்டுவரப்பட்டன. இந்த லாரிகளை சுதாகர், மாரியப்பன் ஆகியோர் ஓட்டி வந்தனர்.
லாரிகள் கடந்த ஜூலை மாதம் 17–ந்தேதி திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு நூல் பண்டல்களை இறக்கி இருக்க வேண்டும். ஆனால் அந்த லாரிகள் வரவில்லை. இது குறித்து செந்தில்குமார் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது திருப்பூரை அடுத்த நல்லூர் காசிப்பாளையம் ரோட்டில் உள்ள ஈஸ்வரன்கோவில் அருகே அந்த கன்டெய்னர் லாரிகள் கேட்பாரற்று நிற்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்றுபார்த்தனர். லாரிகள் மட்டும் நின்று கொண்டிருந்தது. அதில் இருந்த
ரூ.67 லட்சத்து 89 ஆயிரத்து 889 மதிப்பிலான நூல் பண்டல்களை காணவில்லை.
டிரைவர்கள் அந்த லாரிகளை அங்கேயே விட்டுவிட்டு நூல் பண்டல்களை எடுத்து கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நூல் பண்டல்களை திருடி சென்ற நபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய 2 பேர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(36) மற்றும் முருகானந்தபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருடப்பட்ட நூல் பண்டல்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்கள். அதில், திருடப்பட்ட நூல் பண்டல்கள் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் வைத்து வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லாரி டிரைவர்கள் உள்பட 5–க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.