வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி; தலைமை ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி; தலைமை ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23½ லட்சம் மோசடி செய்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமலிங்கம். இவருடைய மனைவி செல்வபாக்கிய செந்தில்குமாரி. இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கையை சேர்ந்த ராஜா மகன் சுகிர்தராஜிடம் கடந்த ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பி சுகிர்தராஜ் வங்கி கணக்கு மூலம் ரூ.18 லட்சமும், நேரடியாக ரூ.5½ லட்சமும் பணம் கொடுத்துள்ளார். ஆனால் சுகிர்தராஜூக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.

இதனால் சுகிர்தராஜ், தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி முத்துராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். ஆனால் முத்துராமலிங்கம், பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து சுகிர்தராஜ், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முத்துராமலிங்கமும், அவரது மனைவியும் ரூ.23½ லட்சம் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்துராமலிங்கம், அவருடைய மனைவி செல்வபாக்கிய செந்தில்குமாரி மற்றும் அவரது தோழியும், ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான சுப்புலட்சுமி, அவருடைய மகன் அருண்பாக்கியராஜ் குமார் ஆகியோர் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் முத்துராமலிங்கம், அவரது மனைவி செல்வபாக்கிய செந்தில்குமாரி, சுப்புலட்சுமி, அருண்பாக்கியராஜ் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 14-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து முத்துராமலிங்கம், அருண்பாக்கியராஜ் குமார் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையிலும், செல்வபாக்கிய செந்தில்குமாரி, சுப்புலட்சுமி ஆகிய இருவரும் திருவாரூர் மகளிர் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Next Story