வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நாகை மாவட்டத்தில் 12½ லட்சம் வாக்காளர்கள்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு நாகை மாவட்டத்தில் 12½ லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலில் 12½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியிதாவது:-

நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, நாகை, பூம்புகார், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,511 வாக்கு சாவடிகள் உள்ளன.

நாகை மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 557 ஆண்களும், 6 லட்சத்து 30 ஆயிரத்து 951 பெண்களும், 29 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலின் விவரம் வருமாறு:-

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 398 ஆண்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்து 521 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 32 ஆயிரத்து 924 வாக்காளர்கள் உள்ளனர்.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 561 ஆண்களும், 1 லட்சத்து 14 ஆயிரத்து 936 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 512 வாக்காளர்கள் உள்ளனர்.

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 515 ஆண்களும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 410 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 927 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகை சட்டமன்ற தொகுதியில் 90 ஆயிரத்து 374 ஆண்களும், 94 ஆயிரத்து 882 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 262 வாக்காளர்கள் உள்ளனர். கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் 82 ஆயிரத்து 303 ஆண்களும், 84 ஆயிரத்து 709 பெண்களும் என மொத்தம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 12 வாக்காளர்கள் உள்ளனர்.

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 89 ஆயிரத்து 406 ஆண்களும், 91 ஆயிரத்து 493 பெண்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 900 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கத்திருத்தம் முகாம் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம்(அக்டோபர்) 7-ந்தேதி, 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பிக்கலாம். அல்லது www.nvsp.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் முலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) கோவிந்தராஜலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தனி வட்டாட்சியர்(தேர்தல்) கபிலன், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Next Story