மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை + "||" + Engineer Gokulraj murder case: Yuvraj guilty trial trial in Namakkal court

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை
என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. இதில் கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் யுவராஜ் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார்.
நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் என்ற சிவக்குமார், கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்ற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட யுவராஜ் திருச்சி மத்திய சிறையிலும், அவரது டிரைவர் அருண் கோவை சிறையிலும், யுவராஜின் சகோதரர் தங்கதுரை உள்ளிட்ட 12 பேர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் இருந்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணி (40) என்ற பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அமுதரசு என்பவர் தலைமறைவாகி விட்டார். செல்வராஜ் ஐகோர்ட்டு ஜாமீனில் இருந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட 15 பேரின் மீதும் குற்றவரைவு சுமத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் 30-ந் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான சாட்சி விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கியது. அப்போது கோகுல்ராஜின் தாயார் சித்ரா ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

நேற்று 2-வது நாளாக நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் கோகுல்ராஜ் தாய் சித்ராவிடம், யுவராஜ் தரப்பு வக்கீல் கோபாலகிருஷ்ண லெட்சுமிராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, சித்ராவிடம் யுவராஜ் தரப்பு வக்கீல், கோகுல்ராஜ் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது தொடர்பாகவும், கோகுல்ராஜ் மற்றும் அவரது சகோதரருக்கு இடையேயான குடும்ப விவகாரம் தொடர்பாகவும் கேள்விகளை கேட்டார். மேலும் கோகுல்ராஜ் தனது நண்பர்களுடன் வைத்துக்கொண்ட வரவு மற்றும் செலவு விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக யுவராஜ் தரப்பு வக்கீல், கோகுல்ராஜின் தாயார் சித்ராவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நீடித்தது.

குறுக்கு விசாரணை முடிந்ததை அடுத்து, வழக்கு விசாரணையை வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். சித்ராவிடம் குறுக்கு விசாரணை முடிந்த நிலையில், 2 மற்றும் 3-வது சாட்சிகளான கோகுல்ராஜின் மூத்த சகோதரர் கலைச்செல்வன் மற்றும் கல்லூரி தோழி, இவருடைய தாயார் ஆகியோரிடம் வருகிற 4-ந் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை