6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டார்


6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட வருவாய் அலுவலர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி நேற்று வெளியிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை (தனி), வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 82 ஆயிரத்து 273 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 52 ஆயிரத்து 72 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 29 ஆயிரத்து 988 பேரும், 3-ம் பாலின வாக்காளர்கள் (இதரர்) 213 பேரும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மாவட்ட கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் 1850 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பொதுமக்கள் சென்று தங்களது பதிவுகள் மற்றும் திருத்தங்களை சரிபார்த்து கொள்ளலாம். 1.1.2019-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி 1.9.2018 முதல் 31.10.2018 -ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்ய விண்ணப்ப படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அரசு வேலை நாட்களில் பெறப்படும்.

மேலும் வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த முகாம் நாட்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும் இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தனி தாசில்தார் தணிகாசலம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ், மற்றும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story