சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் கவுன்சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). திருமணம் ஆகாதவர். அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.
கடந்த 25–ந் தேதி தனது வீட்டின் அருகில் உள்ள 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கித்தருவதாக தங்கராஜ் ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய அந்த சிறுமி அவருடன் சென்றாள். பின்னர் அவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டுக்குள் வைத்து சிறுமியை தங்கராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த சிறுமியிடம் இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார்.
இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே தனது வீட்டுக்கு சென்றுள்ளாள். பின்னர் நடந்த விவரத்தை அந்த சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அவர்கள் இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஈரோடு காளை மாட்டுசிலை அருகில் நின்றுகொண்டு இருந்த தங்கராஜை மகளிர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தங்கராஜ் மீது கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.