‘கூவமாக மாறும் முன்பு வைகையை பாதுகாக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் பேச்சு
வைகை ஆற்றில் ஒரு நாளில் 98 லட்சம் லிட்டர் சாக்கடை நீர் கலக்குகிறது என்றும், கூவமாக மாறும் முன்பு வைகையை பாதுகாக்க வேண்டும் என்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
திருப்புவனம்,
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘வைகையை பாதுகாப்போம், வறட்சியை விரட்டுவோம்’ என விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்புவனத்தில் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்திற்கு மாநில துணை பொதுச் செயலாளர் திருஞானம் தலைமை தாங்கினார். துணை அமைப்பு செயலாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:–
திருப்புவனம் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அதே சமயம் வைகை ஆறு இருப்பதை பார்த்து வருத்தமாக இருக்கிறது. ஆற்றில் தண்ணீர் வரவில்லை. சாக்கடை தான் தெளிந்து வருகின்றது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பிரசார பயணத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கிவைத்தார். மக்கள் விழிப்புணர்வு அடைந்தால் தான் அதிகாரிகள் தெரிந்துகொள்வார்கள். இதேபோன்று தாமிரபரணியை மீட்போம் என்று பிரசார பயணத்தின்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்தனர். ஆட்சியாளர்களுக்கு தெரிந்தது. ஒரு சிறிய அளவில் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் உள்ள ஆறுகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நான் அரசியல் பிரசாரத்திற்காக வரவில்லை. நமக்கு தாய் போன்ற நதிகளை மீட்கவே என்னால் முயன்ற நடவடிக்கை எடுக்கிறேன். இப்போது விட்டால், எப்போதும் நதிகளை காப்பாற்ற முடியாது. இன்று சென்னையில் உள்ள கூவம் நதியை பற்றி மக்கள் சாக்கடை நீர் என்று பேசுகின்றனர். காரணம் மாறி, மாறி ஆண்ட ஆட்சியாளர்களால் தான் இந்த நிலைமை. 40 ஆண்டுகளுக்கு முன்பு கூவம் ஆற்றில் மக்கள் குளித்தனர். வீட்டு உபயோகத்திற்கு அந்நதியின் தண்ணீரை பயன்படுத்தினர். சாமிகளுக்கும் அபிஷேகம் செய்தனர். ஆனால் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதேபோல் வைகையும் மாறிவிட கூடாது. அதற்காகவே இந்த விழிப்புணர்வு பிரசாரம். வைகை ஆற்றில் முன்பு 11 மாதங்கள் தண்ணீர் ஓடியதாகவும், ஒரு மாதம் தண்ணீர் வரவில்லை என்றும் முன்னோர்கள் கூறினர். ஆனால் தற்போது வைகையில் ஒரு மாதம் தான் தண்ணீர் செல்கிறது.
காமராஜர் முதல்–அமைச்சராக இருந்தபோது, வைகை அணையில் இருந்து தண்ணீர் பெற ஒப்பந்தம் பெறப்பட்டது. அதில் மொத்தம் 12 பங்காக பிரித்து, 7 பங்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 3 பங்கு சிவகங்கை மாவட்டத்திற்கும், 2 பங்கு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் என்று பிரிக்கப்பட்டது. 10 பங்கு தண்ணீர் வரவேண்டிய சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஒரு பங்கு கூட வரவில்லை. மதுரை பகுதியில் மட்டும் 98 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவுகள் வைகையில் கலக்கின்றன. எனவே கூவமாக மாறும் முன்பு வைகையை பாதுகாக்க வேண்டும். இதையெல்லாம் மாற்ற மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.