ஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி


ஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2018 5:15 AM IST (Updated: 2 Sept 2018 10:27 PM IST)
t-max-icont-min-icon

ஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராடுவோம் என மதுரையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மதுரை,

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘வைகையை பாதுகாப்போம்... வறட்சியை விரட்டுவோம்‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. இதில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். முதல் நாள் பேரணி, திண்டுக்கல் மாவட்டம் வாலிப்பாறையில் தொடங்கி மதுரை மாவட்டம் சோழவந்தான் வரை சென்றது. இந்தநிலையில், நேற்று 2–வது நாள் பிரசாரம் மதுரை விரகனூரில் தொடங்கியது.

முன்னதாக அன்புமணி ராமதாஸ், மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தினை பார்வையிட்டார். பின்னர் அவர் வைகையை காப்போம் என்ற வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது–

மதுரை மக்கள் வைகை ஆற்றை, மதுரையின் கூவம் என கூறுகின்றனர். கூவம் ஆற்றில் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிக்க தண்ணீர் பிடித்து சென்றனர். தற்போது வைகையும் அந்த நிலையை அடைந்து விட்டது. வைகை ஆறு கழிவு நீர் கால்வாயாக மாறி வருகிறது.

வைகை ஆறு சோழவந்தான் வரை நன்றாக இருக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், வைகை ஆற்றின் நிலைமை மோசமாக இருக்கிறது. இங்கு கழிவுநீர் அதிக அளவில் கலக்கிறது. இதுபோல் அரசு மருத்துவமனையில் இருந்து வெளிவரும் கழிவு நீரும், 200 தொழில் நிறுவனங்களின் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் வைகை ஆற்றில் கலக்கிறது. 58 இடங்களில் திடக்கழிவு கலக்கிறது. இது தான் வைகை ஆற்றின் இன்றையை நிலை. வைகை ஆறு சாக்கடையாக மாறி உள்ளது. மணல் இல்லை. இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தான். வைகை ஆறு மற்றும் விவசாயத்தை காக்க மக்கள் போராட தயாராக உள்ளனர். ஆறுகளை காப்பாற்ற தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

வரு‌ஷ நாட்டு மலை பகுதியில் காடுகளை அழித்து உள்ளனர். இதனால் தான் மூல வைகை பகுதியில் மழை இல்லை. எனவே காடுகளை காக்க, வரு‌ஷநாடு மலைபகுதியை புலிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும்.

நடிகர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் அவர்களை ஏற்று கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை, பா.ம.க. கடுமையாக எதிர்க்கிறது. இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வர வேண்டும். அப்போது தான் ஊழலில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story