போலி ஆவணங்கள் பல லட்சம் ரூபாய் மோசடி


போலி ஆவணங்கள்  பல லட்சம் ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 3 Sept 2018 3:00 AM IST (Updated: 2 Sept 2018 10:41 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து 4 நிதி நிறுவனங்களில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம்,

மயிலம் அருகே உள்ள சிறுவை பகுதியை சேர்ந்தவர் சாரங்கபாணி மகன் அன்பழகன் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அந்த லாரியின் ஆவணங்களை புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.10 லட்சம் வாங்கினார். பின்னர் அதற்குரிய வட்டி தொகையை கடந்த 8 மாதமாக அன்பழகன் செலுத்தவில்லை.

இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் அகமது(38), அன்பழகன் வீட்டுக்கு சென்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பழகன் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர் ஜெயபால் மகன் பாபுவுடன்(39) சேர்ந்து அகமதுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அன்பழகன், பாபு மற்றும் சேலத்தை சேர்ந்த முருகன், ராணிப்பேட்டை ராமமூர்த்தி, திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரன் உள்ளிட்ட 6 பேர் பல்வேறு பகுதியில் உள்ள 4 தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து ஒரே லாரிக்கு பல்வேறு எண்களில் போலி ஆவணம் தயாரித்து, அதனை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அன்பழகன், பாபு, ராமமூர்த்தி ஆகியோரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமரன் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.


Next Story