அறுவடைக்கு தயாரான நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு


அறுவடைக்கு தயாரான நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Sept 2018 4:15 AM IST (Updated: 3 Sept 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நாகர்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், தாழக்குடி, திட்டுவிளை, செண்பகராமன்புதூர், பறக்கை, தேரூர் மற்றும் குருந்தன்கோடு உள்பட 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறந்தது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரையும் குமரி மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. குமரி மாவட்ட விவசாயிகள் தற்போது நெல் அறுவடைக்கு தயாராக உள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி துவரங்காட்டை சேர்ந்த நெல் விவசாயி செண்பகசேகரன் பிள்ளை என்பவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

இருபோக நெல் சாகுபடி நடைபெறும் குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி முடியும் தருவாயை எட்டியுள்ளது. நெல் நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஆனாலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு 13 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அங்கு குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தான் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதாவது நெல்லில் 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது, கருப்பு நெல் 4 சதவீதத்துக்கு அதிகமானால் நெல் ஏற்றுக்கொள்ளப்படாது என்பன உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டு இருந்தன.

பொதுவாக குமரி மாவட்டம் 2 பருவ மழைகளை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதாலும், கடல் இருப்பதாலும் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே நெல்லில் சுமார் 20 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கிறது. இப்படி இருக்க 17 சதவீதத்துக்கு மேல் ஈரப்பதம் இருக்க கூடாது என்று அரசு கூறுவது முறையல்ல. இந்த விதிகளை கடைப்பிடித்ததால் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் குறைவான அளவே நடைபெற்றது.

இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் எனில் மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லின் விலை ரூ.1750 என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களை இன்னும் திறக்கவில்லை. கொள்முதல் நிலையங்கள் திறக்கவில்லை எனில் அறுவடை செய்யப்படும் நெல் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் தான் விற்க வேண்டும். அப்படி விற்கப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1200 மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஏற்றுக்கூலி, இறக்குகூலி மற்றும் வாகன செலவு உள்ளிட்டவை கொடுக்க வேண்டி இருக்கும். எனவே செலவு போக குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளது. பல நாட்கள் கஷ்டப்பட்டு வளர்த்தெடுத்த நெல்லுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றால் விவசாயிகள் மிகவும் மனவேதனை கொள்வார்கள். எனவே அரசு கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேரூரை சேர்ந்த தங்கப்பன் என்பவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் குறைவான அளவே நெல் கொள்முதல் நடைபெற்றது. பல்வேறு காரணங்களை கூறி விவசாயிகளிடம் இருந்து நெல்களை அரசு கொள்முதல் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றி பல்வேறு விதமான தகவல் வெளியாகி உள்ளது. நெல்கொள்முதல் நிலையங்களை அரசு மூடப்போவதாக கூறப்படுகிறது.

அரசு கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை என்றால் வெளிமார்க்கெட்டுகளில் தான் விற்பனை செய்ய முடியும். ஆனால் மார்க்கெட்டுக்கு நெல்லை கொண்டு செல்ல அதிக செலவு ஆகும். இதனால் இடைத்தரகர்களை நாட வேண்டி இருக்கும். இடைத்தரகர்கள் மிகவும் குறைந்த விலைக்கு தான் கொள்முதல் செய்வார்கள். எனவே விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அரசு நெல் கொள்முதல் நிலையங்களை இன்னும் திறக்காததை பார்க்கும்போது தனியாரை அரசு ஊக்குவிப்பது போல தெரிகிறது“ என்றார்.

Next Story