கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது 21-ந்தேதி வரை நடைபெறுகிறது


கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடங்கியது 21-ந்தேதி வரை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 3 Sept 2018 4:00 AM IST (Updated: 3 Sept 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினரால் கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய்களுக்கான தடுப்பூசி போடும் பணி மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மேற்கொள்ளபட உள்ளது. அதன்படி சோமண்டாபுதூரில் நடைபெற்ற கால்நடைகளுக்கு கோமாரி நோய்களுக்கான தடுப்பூசி போடும் முகாமினை பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கோமாரி நோய் கால்நடைகளை தாக்காமல் இருப்பதற்கு, அவைகளுக்கு வருடத்திற்கு 2 முறை தடுப்பூசி போடும் பணிகள் தமிழக அரசால் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் வட்டாரத்தில் கால்நடைகளுக்கு வருகிற 21-ந்தேதி வரை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளது. இப்பணிகளை பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் ஒரு மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் இடம்பெற்றுள்ளனர். எனவே கால்நடை வளர்ப்போர் அனைவரும் தங்களது கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் பாதுகாக்க இத்தடுப்பூசிகளை போட வேண்டும்.

இதில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் எஸ்தர்ஷிலா, உதவி இயக்குனர் டாக்டர் மூக்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன், கால்நடை டாக்டர்கள்,பால்வளத்துறையின் முதுநிலை ஆய்வாளர் செந்தில், விரிவாக்க அலுவலர் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, அதற்கு 15-வது சுற்று தடுப்பூசி போடும் முகாம் மற்றும் தடுப்பூசி அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியை கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் அரியலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 437 மாடுகள் மற்றும் 2 ஆயிரத்து 913 எருமையினம் உள்ளிட்ட 1 லட்சத்து 68 ஆயிரத்து 350 கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து காத்திடும் பொருட்டு, கால் மற்றும் வாய்நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் 15-வது சுற்று தடுப்பூசி போடும் முகாம் மாவட்டத்தில் வருகிற 21-ந்தேதி வரை அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ளது. மேற்படி தடுப்பூசி போடும் பணிக்காக கால்நடை உதவி மருத்துவர்கள் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முகமது ஆசிப், துணை இயக்குனர் டாக்டர் முருகன், கால்நடை டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story