அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மூடினால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்


அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மூடினால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்
x
தினத்தந்தி 3 Sept 2018 3:30 AM IST (Updated: 3 Sept 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

அரசு நெல் கொள்முதல் நிலையங்களை மூடினால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்.


திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படும் பழனி, ஆத்தூர், நெய்க்காரப்பட்டி உள்பட 7 இடங்களில் தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இவை அனைத்தும் நெல் வரத்து அதிகமாக உள்ள காலங்களில் மட்டும் இயங்கும். வரத்து இல்லாத காலங்களில் மூடப்பட்டிருக்கும். கடந்த ஜூன் மாதம் வரை இயங்கி கொண்டிருந்தது. பின்னர் மூடப்பட்டது. மீண்டும், வருகிற ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்தநிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பாத்திமா ராஜரத்தினம் (ஆத்தூர்):-
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பு இடைத்தரகர்களே விலையை நிர்ணயித்து வந்தனர். இதன்காரணமாக, விவசாயிகளுக்கு நஷ்டமே மிஞ்சியது. ஆனால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே கொள்முதல் செய்யப்பட்டதால் விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைத்தது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களை அரசு மூடிவிட்டால் மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிடும். தற்போது, ஆந்திராவில் ஒரு குவிண்டால் நெல்லை ரூ.1000-க்கே இடைத்தரகர்கள் வாங்குகின்றனர்.

அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.1,750-க்கு கொள்முதல் செய்தாலே விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது என்பதால் ரூ.2 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தநிலையில், மீண்டும் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்யும் நிலை வந்தால் விவசாயம் செய்யவே யாரும் விரும்பமாட்டார்கள். இதன்மூலம், நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன் (பாலசமுத்திரம்):-

நெல்லுக்கான ஆதரவு விலையை ஒரு குவிண்டாலுக்கு ரூ.1,550-ல் இருந்து ரூ.1,750 ஆக மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இதன்மூலம் அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களை மூட அரசு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிமார்க்கெட்டில் குவிண்டாலுக்கு ரூ.1,300 முதல் ரூ.1,500 வரையே விலை கிடைக்கிறது. இது உற்பத்தி செயலவை கூட ஈடுசெய்வதாக இல்லை. சாகுபடி செய்த நெல்லை இணையதளம் மூலம் நல்ல விலைக்கு விற்பனை செய்து தருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும் சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த முறையில் எவ்வாறு நெல்லை விற்பனை செய்ய வேண்டும் என்பது தெரியாது. அதனை தங்களுக்கு சாதகமாக இடைத்தரகர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். எனவே அரசு கொள்முதல் நிலையங்களை மூடினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.

தேனி

தேனி மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் கிடையாது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள் மற்றும் மஞ்சளாறு அணை பாசன பகுதிகளில் நெல் அறுவடை காலங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வழக்கமாக கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் மேல்மங்கலம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘தேனி மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் கிடையாது என்பதால் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப தேவையான இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களிலும் அதே நடைமுறை தான் தொடரும். வழக்கம் போல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்’ என்றார்.

நெல்கொள்முதல் நிலையம் பற்றி மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தை அடுத்த பூ.லட்சுமிபுரம் விவசாயி ஆர்.சசிகுமார் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி எங்கள் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. நாங்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகிறோம். குலமங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை முன்பெல்லாம் வீடுகளில் இருப்பு வைத்து, தேவைப்படும் நேரங்களில் விற்போம். ஆனால் காலமாற்றத்தால் பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தற்போது அறுவடை செய்த உடன் நெல்மணிகளை உடனுக்குடன் விற்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் அறுவடை சமயத்தில் திறக்கப்படுவதில்லை. காலம் கடந்து தாமதமாக திறக்கிறார்கள். இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் அரசு கொள்முதல் நிலையம் நிர்ணயிக்கும் விலையை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்த தொகையைத்தான் வியாபாரிகள் கொடுக்கின்றனர். குலமங்கலத்தில் கடந்த ஆண்டு 70 சதவீத நிலங்களில் அறுவடை முடிவடைந்த பின்னர் மிகவும் தாமதமாகவே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் விவசாயிகளிடம் இருந்து நெல்லை அரசு கொள்முதல் நிலையம் எடுத்துக்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதாவது, ஒரு விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்லை விற்கும்போது சிட்டா அடங்கல் வைத்திருக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் கேட்கிறார்கள். விவசாயி, தனது நிலத்தில் விளைந்து நிற்கும் நெற்பயிரை அறுவடை செய்வதற்கு ஆட்கள், எந்திரங்களை தயார் செய்வதற்கே படாதபாடு படுகிறான். அறுவடை முடிந்த பின், நெல்மணிகளை விற்பனை செய்ய, சிட்டா அடங்கல், சான்றிதழ் வாங்குவதற்கும் அலைய வேண்டியுள்ளது. தனியார் வியாபாரிகளின் நலனுக்காகத்தான் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் பல இடங்களில் தாமதமாக திறக்கப்படுகின்றன. மேலும் நெல் கொள்முதல் செய்யும் போது குறிப்பிட்ட சதவீத நெல் கழிக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, முன்கூட்டியே நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பது (அதாவது வருடத்தில் குறைந்தது 6 மாதம் திறந்திருக்க வேண்டும்), அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை கழித்துக்கட்டாமல் அப்படியே கொள்முதல் செய்வது போன்று விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டால் நாங்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட உந்தப்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டால் இடைத்தரகர்கள், வியாபாரிகள் தலையீடு இல்லாமல் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் விதைப்பு காலம் என்பதால் நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை. கொள்முதல் நிலையங்களில் அந்தந்த மாவட்டங்களில் விளையும் அனைத்து பயிர், தானியங்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன்மூலம் விவசாயிகள் அதிக பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story