பணம் கேட்டு மிரட்டும் கட்டுமான நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் நெசவு தொழிலாளி குடும்பத்தோடு மனு
பணம் கேட்டு மிரட்டும் கட்டுமான நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் நெசவு தொழிலாளி குடும்பத்தோடு மனு அளித்தார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது உடுமலை கொடுங்கியத்தை சேர்ந்த நெசவு தொழிலாளியான வசந்தகுமார் என்பவர் குடும்பத்தோடு ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
எங்களுக்கு சொந்தமான இடம் உடுமலை கொடுங்கியத்தில் உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்ட முயற்சி செய்த போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தினர் தொடர்பு கொண்டனர். அப்போது அந்த நிறுவனத்தினர் வீடு கட்டித்தருவதாக கூறினார்கள். இதனால் வீடு கட்டுவதற்காக ரூ.9 லட்சத்து 16 ஆயிரம் வரை கொடுத்தோம். ஆனால் அந்த கட்டுமான நிறுவனத்தினர் வீட்டு வேலைகள் ஏதும் செய்யவில்லை. இதனால் மீதம் இருந்த பணிகளை நாங்களே செய்தோம். இதற்கு ரூ.5¼ லட்சம் வரை செலவானது. இந்த நிலையில் வீட்டு வேலை முடிந்ததும் எங்களிடம் பணம் கேட்டு தனியார் கட்டுமான நிறுவனத்தினர் அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.