பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திருமணம் செய்ய இருந்த மணப்பெண் மாயம்
பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வை திருமணம் செய்ய இருந்த மணப்பெண் மாயமானார். கடத்திச்சென்றுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (வயது 43). இவர் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளார். எஸ்.ஈஸ்வரனுக்கும், கோபி அருகே உக்கரம் பெரியார் நகரை சேர்ந்த ரத்தினசாமி–தங்கமணி தம்பதியின் மகளான சந்தியா (23) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி வருகிற 12–ந்தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதனால் திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 1–ந்தேதி மணப்பெண் சந்தியா, சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் அன்று இரவு வரை அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் ரத்தினசாமி, அந்த உறவினரிடம் விசாரித்தார். அப்போது சந்தியா அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ரத்தினசாமி, தங்கமணி மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினார்கள். மேலும் ரத்தினசாமி மற்றும் தங்கமணி ஆகியோர் இதுகுறித்து கடத்தூர் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் ‘சந்தியாவுக்கும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கொளத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த அன்புராஜ் என்பவருடைய மகன் விக்னேஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவர்கள் 2 பேரும் காதலித்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் விக்னேஷ்தான் தங்களுடைய மகளை கடத்திச்சென்று உள்ளார்’ என்று கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.