ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் புகார்: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி கேள்வி


ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் புகார்: பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி கேள்வி
x
தினத்தந்தி 4 Sept 2018 5:30 AM IST (Updated: 3 Sept 2018 8:49 PM IST)
t-max-icont-min-icon

ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் புகார் தொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று முன்னாள் மத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி,

முன்னாள் மத்திய மந்திரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெய்பால் ரெட்டி நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய ராணுவத்துக்கு தேவையான தளவாடப்பொருட்களை வெளிநாடுகளில் கொள்முதல் செய்யும்போது மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்ட பிறகே ஒப்பந்தம் செய்யப்படும். ஆனால் மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்காமலும், பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கூட தெரியாமலும் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுடன் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு கூட பிரதமரின் பிரான்ஸ் பயண திட்டத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாது என்று மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறியிருந்தார். ரபேல் போர் விமானங்களை என்ன விலைக்கு வாங்கலாம் என்பது குறித்து இந்திய விமான நிறுவனத்துடன் தொடர்ந்து ஆலோசித்து வருவதால் இந்த முறை ரபேல் போர் விமான ஒப்பந்தம் இறுதி செய்யப்படமாட்டாது என்றும் வேறு சில வணிக ரீதியாலான ஒப்பந்தம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்றும் கூறி இருந்தார்.

ஆனால் அடுத்த 2 நாட்களில் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கூட தெரியாமல் அனில் அம்பானியுடன், பிரதமர் மோடி மட்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை செய்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்கு அவசர தேவையாக குறைந்தபட்சம் 126 ரபேல் போர் விமானங்கள் தேவை என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கும், இந்தியாவில் உள்ள அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நாட்டின் பாதுகாப்புக்கு குறைந்தபட்சம் 126 போர் விமானங்கள் தேவை என்ற நிலையில் பிரதமர் மோடி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் 36 விமானங்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட கூடுதல் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ரூ.41 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

இந்த மிகப்பெரிய ஊழல் குறித்து பிரதமர் மோடி இதுவரை வாய்திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? அவரது மவுனமே ஊழலுக்கு முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. எனவே ரபேல் போர் விமானம் வாங்கியது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அமைச்சரவையில் அனுபவம் இல்லாதவர்களை நியமிப்பதை மோடி ராஜதந்திரமாக கொண்டுள்ளார்.

அரசியலிலும், வேறு துறையிலும் அனுபவம் இல்லாத நிர்மலா சீத்தாராமனை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்தது தவறு. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

ரபேல் விமான ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்ப வேறு முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. கடந்த 70 ஆண்டுகளிலேயே மிக மோசமானது பண மதிப்பு இழப்பு திட்டம். இந்த திட்டத்தால் வங்கி வாசல்களில் நீண்ட வரிசைகளில் காத்திருந்த 125 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கான திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டது. கோடிக்கணக்கான பொதுமக்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.

ஆனால், பெரிய நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த திட்டத்தை அறிவித்தபோதே நாட்டுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்று மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்தார். அதன்படியே நடந்துள்ளது. எனவே, பண மதிப்பு இழப்பு நடவடிக்கைக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மற்றும் எம்.எல்.ஏக்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story