முதல்–அமைச்சரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் இறகுபந்து விளையாடி விவசாயிகள் போராட்டம்


முதல்–அமைச்சரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் இறகுபந்து விளையாடி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:30 AM IST (Updated: 3 Sept 2018 11:02 PM IST)
t-max-icont-min-icon

கடைமடைக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்காத முதல்–அமைச்சரை கண்டித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இறகுபந்து விளையாடி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்,


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். விவசாயிகள் சங்க கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் சிலர், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.


பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இறகுபந்து விளையாடி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் கூறியதாவது:–

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த ஆண்டு சாகுபடி செய்யலாம் என்ற ஆர்வத்தில் நாற்று நடவு செய்தோம். ஆனால் தண்ணீர் இல்லாததால் நாற்றுகள் காய்ந்து கொண்டிருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் அனைவரும் திகைத்து கொண்டிருக்கிறோம்.


இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடற்பயிற்சியும், இறகுபந்து விளையாட்டும் விளையாடிக் கொண்டு இருக்கிறார். இதை கண்டிக்கும் விதமாக தான் நாங்களும் இறகுபந்து விளையாடினோம். உடனடியாக விவசாயிகளின் நலன்கருதி கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story